கணப்பொழுதில்
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
கவி 607
நினைவிருக்கும் வரையில் இந்தப் பதிவிருக்கும்
ஒரு தேசம் உருவாக்க நினைத்தது பாவமா
பெருங்கனவொன்றை கொண்டதால் கிடைத்த சாபமா
மொழிகளின் மூலமொழியை பேசும் இனமொன்று
அழித்தொழிக்கப்பட்ட கொடுமையை கூறவா இன்று
மே 18 மனிதநேயத்தை தொலைத்த நாள்
மேதினியே வெட்கி தலைகுனியவேண்டிய நாள்
கணங்களுக்குள் கொலைகள் எண்ணுக்கணக்கின்றி நிகழ்ந்தது
இனமொன்றை சிதைதுமே பழிதீர்த்து உலகம் மகிழ்ந்தது
நம்பினார் கைவிடப்படாரெனும் கோட்பாடு போட்டுடைக்கப்பட்டது
கேளுங்கள் தரப்படுமெனும் வாக்கியமும் செயலிழந்துவிட்டது
கொலைசெய்வதை கலையாகக் கொண்டவர்கள் தலைப்பட்டார்கள்
விலையற்ற உயிர்களை ஈவிரக்கமின்றி கவர்ந்திட்டார்கள்
ஆயிரமாயிரம் சிலுவைகள் தோள்களில் சுமந்த இயேசுநாதர்கள்
பேய்களிடம் சிக்கியே உன்னதர்கள் விட்டார்தம் உயிர்கள்
புத்தர்வழி வந்தவர்களும் புத்தசித்தாந்தத்தை குழிதோண்டி புதைத்தனர்
இரத்தம் குடிக்கும் அரக்கர்கூட்டம் தமிழினத்தை வதைத்தனர்
ஆண்டுகொண்டோர் தந்தாரே மாறாத காயம்
மாண்டுபோனதே உலக மாந்தர்தம் நேயம்
பஞ்சமா பாதகரின் இராட்ச்சததனத்தை நெஞ்சும் மறந்திடுமா
மிஞ்சியிருப்போர் எம்மெண்ணத்திலந்த கொடிய காட்சிகள்தான் மறைந்திடுமா
ஜெயம்
18-05-2022
