வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 214
14/03/2023 செவ்வாய்
“தீ”
தீயே! நீ அரசனா,அசுரனா!
தீர்வை நீயே சொல்லிவிடு!
பூவை ஒத்த என் மனத்தை
புழுங்காது நீயும் காத்துவிடு!
கடவுள் கருவறை வரை சென்று
காட்டுகிறா யவர் முகம் நன்று
உருவ மெல்லாம் காட்டு கிறாய்!
உள்ளம் தனையே உருக்கு கிறாய்!
பாவ இருளை அகற்றிடவே,
பரமன் அருள் தருவதுபோல்,
சூழநிற்கும் இருள் அகற்றி,
தூய ஒளியும் தருகின்றாய்!
ஓம குண்டத்தில் நீ ஒளிர்ந்து
உலக விமோசனம் தருகின்றாய்!
பூமி தழைத்து வாழவென
புண்ணியம் பலவும் செய்கின்றாய்!
பச்சை உணவை பதமாக்கி
பக்குவ உணவு தருகின்றாய்!
மெச்சத் தகுந்த வேலையெலாம்
மேன்மை யுடனே செய்கின்றாய்!
செய்யும் நல்ல வேலையுடன்
சினம் தரும் வேலைகளும்
மெய்யாய் நீயும் செய்கின்றாய்!
மேதினி வருந்த வைக்கின்றாய்!
பிழம்பாய் எழுந்து வெளியேறி
பிறவற்றைப் பொசுக்கி நீறாக்கி
குழம்பாய் ஓடிக் குன்றடியின்
குடிகளைத் தூரே விரட்டுவதேன்?
காட்டுத் தீயெனும் பெயருடனே
கடகட வென்று களம்கண்டு
வாட்டி வதைக்கும் உன்செயலை
வாழ்த்துவோர் உலகில் யாருண்டு?
நன்றி
மதிமகன்
