அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
சக்தி சக்திதாசன்
காலையின் மலர்வில்
கண்களும் விழித்திடும்
எதற்காகக் கலக்கம்?
இரவின் கருமையைக்
கலைப்பது விடியல்
வாழ்வின் சுமைகளை
குறைத்திடும் காலம்
விழுந்திடும் போதெல்லாம்
எழுந்திடும் வீரமும்
விரைந்திடும் வெற்றியை
பிடித்திடும் வல்லமையும்
கொண்டதே நெஞ்சமெனும்
உண்மையை உணர்ந்திட்டால்
உலகமே வசப்படும்
வானத்தின் நீலத்தை
எல்லையாய்க் கொண்டு
மேகத்தின் வெண்மையை
உள்ளத்தில் ஏந்தி
வளர்பிறையென்றே நாளும்
வளர்ந்திடும் உணர்வோடு
இரவினைக் கலைத்து
விடியலைத் தேடுவோம்
ஆயிரம் வாசல்கள்
அனைவரின் வாழ்வில்
அனைத்தையும் அறிந்தே
பயணத்தை நடத்தினால்
வருவதும் போவதும்
அவரவர் கைகளில்
வெற்றியும் தோல்வியும்
சமனெனக் கொள்ளலாம்
வரவுகள் மட்டுமே
வாழ்வினில் இல்லை
செலவுகள் இல்லாமல்
மகிழ்வுகள் இல்லை
இருப்பதைக் கொண்டு
சிறப்புடன் வாழ்ந்து
இல்லாதோர் நிலையறிந்து
இரக்கத்தை விதைத்தால்
இகமொரு சொர்க்கமே !
சக்தி சக்திதாசன்
