சக்தி சக்திதாசன்

சற்றேனும் விலகாமல்
பற்றேதும் குறையாமல்
கற்றோதும் பண்புடன்
பெற்றோர்கள் வளர்ப்பார்கள்

முற்றேதும் கிடையாது
அற்றேகும் காலத்தும்
ஊற்றாகும் அன்புடன்
ஈற்றுவரை காப்பார்கள்

போற்றுதல் வேண்டாமல்
பற்றுதல் கொண்டெமை
கற்றோர்கள் சபையிலே
நிற்றேக வைத்திடுவார்

நற்றோதும் பண்புடன்
சுற்றோர்கள் வாழ்த்திட
சிற்றேதும் சலிப்பில்லா
வற்றாமல் அன்புசெய்வர்

சீற்றம்கொள்ளா பொறுமை
ஏற்றம்வேண்டா அருஞ்சேவை
மாற்றமில்லா அன்புமழை
பெற்றோரின் பெருங்குணமே !

குற்றமற்ற உள்ளம்கொண்டு
ஈற்றுவரை அவரைக்காத்து
போற்றியாம் பேணிநாளும்
ஏற்றிடுவோம் பெற்றோரையே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan