மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 166
15/03/2022 செவ்வாய்
ஏழ்பிறப்பும் காணா எழில்!
——————————–
வயலோரம் குயிலொன்று
-துயிலெழுந்து கூவும்!
கயல்மீனும் கண்விழித்துக்
-காதலியை எழுப்பும்!

அஞ்சுகமும் தன்குரலில்
-கொஞ்சுமொழி பேசும்!
மஞ்ஞைகளும் மரகதமாம்
-மரக்கிளையில் துயிலும்!

கலைமானின் மருள்விழிகள்
-காவியங்கள் கூறும்!
தலைமீது கவர்க்கொம்பு
-தற்காப்புச் செய்யும்!

மலர்மீது வண்டினமும்
-மாயவலை வீசும்!
குலமகளாம் அவள்மீது
-வீழ்ந்து இசைபாடும்!

தவளையும் தம்குரலில்
-தம்பூரா மீட்கும்!
குவளையும் இதழ்விரித்து
-குவலயத்தை ஈர்க்கும்!

மலையோரம் மா நதியும்
-மகிழ்வாய் நடமாடும்!
அலைபாயும் ஆழ்கடலும்
-அருமுத்துக் குளிக்கும்!

எழிலான இயற்கையவள்
எழில்நடனம் புரிவாள்!
ஏழ்பிறப்பும் காணவொணா
-எழிலதனைத் தருவாள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading