திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் கமலாக்கா,பாவையண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு- 246.
நிலவுடன் உலா
“””””””””””””””
காய் மா மா விளம்
காய் மா காய்

ஆதியிலே யன்னை அன்னத்தை ஊட்டிட
அங்கிருந்தே யென்னை ஈர்த்தவளே
சோதியினா லென்றன் சிந்தை குளிர்ந்திட
சொர்க்கமென்றே மாயம் செய்தவளே
பாதியிலே நாங்கள் பார்த்துக் களிக்கையில்
பஞ்சுமுகி லுக்குள் பாய்ந்தவளே
தோதிலையே உன்றன் தோற்றம் மறைப்பதே
தோழியென்றே வாழ்வில் வந்தவளே!

வான்வழிநீ வந்து வாவென் றழைக்கையில்
வண்ணத்த மிழமு தூறிடுமே
தேன்மொழியா லுன்றன் தேகம் பொலிந்ததோ
தென்றலும்முன் வந்து பேசியதோ
கூன்மதியே யிங்கு குற்றம் இலாததோர்
கோமகனா ரிங்கே கூறிடுவாய்
வான்வழிவந் தவுன தன்பர் அனைவரின்
வாய்மொழிகேட் டிங்கே மீட்டளிப்பாய்!

திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
19-12-2023.

Nada Mohan
Author: Nada Mohan