அறிவின் விருட்சம்
“அறிவின் விருட்சம்”
ஜெயம் தங்கராஜா
சசிச
மூண்ட தீ
முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
மூண்ட நெருப்பு
நெடுங்காலம் ஆகிடினும்
நினைவைவிட்டு நீங்காது
சிந்திய இரத்தமும்
சீவன் துளிகளும்
கண்முண்ணே நிழலாடுகின்றது
கனவையும் நிரப்புகின்றது
வழிகளில் வலிகள்
விடாமல் துரத்தியது
விழிகளில் ஈரம்
வாழ்வும் நொருங்கியது
காலனோ அருகாமையில்
கூப்பிடும் தூரத்தில்
மரணங்கள் மலிவானது
மூச்சு தினறியது
கோவில் தெய்வங்கள்
கைவிட்டு விட்டன
மனிதர் உலகம்
மவுனம் காத்தது
நந்திக்கடலில் மூழ்கி
நீதி மூர்ச்சையானது
ஏனென்று கேட்காதே
எட்டியே எட்டுத்திக்கும்
சோதனைகள் மொத்தமாக
சாபமான பொழுதுகள்
வேதனை நிலையானது
வாழ்வே போர்க்களமானது
எதிர்பார்த்தவரும் எதிரிகளாகி
ஏதிலிகளாக்கி பழிதீர்த்தனர்
தேகங்கள் சரிந்தன
தோல்வி வரலாறானது
தொப்பிள்கொடி உறவுகளும்
தொலைந்தனரே அக்கரையில்
இனத்தின் சாட்சிகளும்
இல்லாது மறைந்தனர்
நம்பினோர் வஞ்சித்து
நெஞ்சை மூடினர்
குண்டு சத்தங்களால்
கெட்டுப்போனது வழமை
துக்கம் குடிகொண்ட
தூங்காத நாட்களவை
திண்டாடியது இனமொன்று
தாயகம் சிவப்பானது
காவல் தெய்வங்கள்
கருகியே காவியமானார்கள்
அன்றே பற்றியது
ஆயுளுக்கும் அணையாது
ஜெயம்
28-05-2023
