நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

மொழி
“”””””””
மா மா விளம் மா

மொழிவாய் உன்றன் முந்தையர் மொழியை
மொழியின் அழகு மெல்லெனத் தவழ
அழியா மொழியாய் ஆற்றலைப் பெருக்கி
அருமைத் தமிழென் றர்த்தம் புகட்டி
விழிக்குள் ஒளியாய் வீரியம் தருவாள்
விரும்பும் கவியால் வித்தகர் மகிழ
வழியாய்த் தமிழாள் வார்த்திடும் பாதை
வருவோர் போவோர் வாக்கினால் மேதை!

பொதிகை பிறந்து பொங்கிய தமிழே
புலவோர் புகழும் பொய்கையின் ஊற்றே
மதியுள் விளைந்த மாண்புடை அமுதே
மரபைப் பயிற்றும் மக்களின் கொடையே
பதியைப் போற்றும் பாக்களின் தேனே
பரப்பும் கலைசொல் பந்தமும் நீயே
புதிதாய்ப் துலங்கும் பூம்புனல் மொழியே
பூவில் விளைந்த பொன்னெழில் தாயே!

(தமிழே தாயே நீ பரப்புகின்ற கலைகளெல்லாம் சொல்கிறதே பந்தம் நீயென்று)

நாயேன் எனையுன் நன்மக வென்றே
நவில்வாய் ஒருகால் நகைப்பினை ஓட்டிச்
சேயேன் வெதும்பிச் செய்வதொன் றறியேன்
செம்மை தந்துன் சேவகம் நாட்டத்
தாயே ஆள்வாய் தாபரித் தெனையும்
தருவாய் அமிர்தம் தங்கிட நாவில்
காயேன் எனக்கே, கனியினைக் காண்பேன்
கற்றுத் தருவாய் கவிநடை எனக்கே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan